நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் |

'ஒரு கைதியை சில நிமிட வாய்தா விசாரணைக்காக ஜெயிலில் இருந்து கோர்ட்டிற்கும், அங்கிருந்து மீண்டும் ஜெயிலுக்கும் போலீசார் ஒருநாள் பயணமாக அழைத்துச்செல்வது சாதாரணமாக தெரிந்தாலும் அது எவ்வளவு 'ரிஸ்க்' என்பது ஒவ்வொரு போலீசும் உணர்ந்திருப்பார்கள். அதைதான் என் 'வழிக்காவல்' படம் மூலம் இந்த சமூகத்திற்கு சொல்லி இருக்கிறேன்' என சமூக பொறுப்புணர்வுடன் பேசுகிறார் இளம் இயக்குனரான விஜய்ராகவா.
மதுரை திருநகரைச் சேர்ந்த இந்த 28 வயது இளைஞர், எந்த முன் அனுபவமின்றியும், யாரிடமும் பயிற்சி பெறாமலும் 2020 முதல் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை எடுத்து வருகிறார். குறும்படத்தில் இருந்து அடுத்த உயர்வாக 'செல்லுார்' என்ற பெயரில் தியேட்டர்களில் 'ரிலீஸ்' ஆகும் வகையில் படம் இயக்கியுள்ளார். வழக்கம் போல் இவரே ஹீரோ.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்....
''எங்க தாத்தா கணேசன் அந்த காலத்தில் வெளியான 'ஆரவல்லி' படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடிக்க விரும்பினாலும் குடும்பத்தினர் விடவில்லை. எங்கப்பா சந்திரசேகரன் சிவாஜி கணேசன் பக்தர். ரசிகர் மன்றத்தலைவராக இருந்தவர். சிவாஜிதான் எங்கப்பாவுக்கு திருமணம் செய்து வைத்தவர். சினிமா தொடர்புடைய குடும்பத்தில் பிறந்ததால் எனக்கு அந்த ஆர்வம் வந்தது.
இதுவரை 6 குறும்படங்கள், 3 ஆல்பம் மியூசிக் பண்ணியுள்ளேன். ஜியோ சிம் வந்த புதுசு. ஒன் ஜிபி., டேட்டா கிடைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என 'ஜியோ காதல்' என்ற குறும்படத்தை முதன்முதலாக எடுத்தேன். ஓட்டலில் வேலை செய்த அனுபவத்தை வைத்து 'ரூம் பாய்' படம் எடுத்தேன். மாணவர்கள் சிலர் பஞ்சர் ஒட்டும் 'பேஸ்ட்' போன்றவற்றை போதைக்கு பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற மாணவர்கள் குறித்தும் அவர்களுக்கு மறுவாழ்வு குறித்தும் 'மறுவாழ்வு' படம் எடுத்தேன். நானே ஒருவரை மறுவாழ்வுக்கு சேர்த்துவிட்ட அனுபவம்தான் அந்த படம்.
5வது படமாக 'இன்டர் செக்ஸ்' எடுத்தேன். தலைப்பை கேட்டதும் 'அந்த' மாதிரி படம் என நினைக்க வேண்டாம். 13 வயதில் ஹார்மோன் மாறுபாடால் உடலில் ஏற்படும் ஆண், பெண் தன்மை குறித்த படம் அது. என் நண்பனின் அனுபவம்தான் அந்த படம். 6வது குறும்படம் 'இரவு பறவைகள்'. மதுரையில் ஒருநாள் இரவில் 5 இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என படமாக கொண்டு வந்தேன். 7வது படம் 'வழிக்காவல்'. மதுரை புதுஜெயில் ரோடு வழியாக கைதிகளை போலீசார் அழைத்துச்செல்வதை பார்த்தேன். அந்த தாக்கம்தான் இந்த படத்தை எடுக்க தோன்றியது.
'வழிக்காவல்' படத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச விருதுபெற அனுப்பினேன். இங்குள்ள 'அரசியலால்' ஏமாந்ததுதான் மிச்சம். அதனால் 'ஒ.டி.டி.,'யில் 'ரிலீஸ்' செய்தேன். எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னிடம் 10 உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். நானே தயாரிப்பாளர், இயக்குநர், நடிகராக இருப்பது எனக்கு சிரமமாக இல்லை.
சிலர் 'சினிமாவுக்கு சென்றால் நல்ல எதிர்காலம் இருக்குமே' என்றார்கள். எனது படங்களை பார்த்து சினிமாவில் நடிக்க அழைத்தால் நிச்சயம் செல்வேன். அதேசமயம் பத்தோடு பதினொன்றாக வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. என் திறமை நிச்சயம் என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் விஜய்ராகவா.