சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சென்னை
நாடக அரங்குகளை அமெச்சூர் நடிகர்கள், அதாவது பெரிய உத்யோகங்களில்
இருப்பவர்கள் குறிப்பாக பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களின் நாடகங்கள்
ஆக்கிரமித்திருந்த காலம். கதை எழுதியவர்களும், நடத்தியவர்களும்,
நடித்தவர்களும் அவர்களே. நாடகத்தைப் பார்க்கின்ற சபா உறுப்பினர்களில்
பெரும்பான்மையினரும் அவர்களாகவே இருக்க, இயல்பாகவே சபா நாடகங்கள் பிராமண
சமூகத்தைச் சேர்ந்த கதைகளாகவே அமைந்திருந்தன.
பிராமணரல்லாத
கலைஞர்களான தொழில்முறை நடிகர்களின் நாடகங்களுக்கு மேடை கிடைப்பதே
அரிதாயிருந்த காலம் வேறு. கால மாறுதல்களை அனுசரித்து நாடகங்களில் புதிய
உத்திகளை பயன்படுத்த தொழில்முறைக் கலைஞர்கள் தவறவிட்டிருந்ததும் அவர்களது
சரிவுக்கு காரணமாகவும் அமைந்திருந்தன. இந்த சூழ்நிலையில் மிக நீண்ட
வசனங்களுடன் தஞ்சை வாணனின் “களம் கண்ட கவிஞன்” என்ற நாடகத்தை தனது சிவாஜி
நாடக மன்றத்தின் மூலம் அரங்கேற்றித் தொடர்ந்து நடத்த அரங்கமின்றி இருந்து
வந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
சபாக்களில் தொடர்ந்து நாடகம்
கிடைக்க வேண்டுமென்றால் பிராமண சமூகக் கதையாக இருக்க வேண்டும் என்று நாடகக்
குழு உறுப்பினர்கள் சிவாஜியிடம் கூறத் தொடங்க, அப்போது பிராமண இளைஞரான கே
சுந்தரம் என்பவர் ஒரு குடும்பக் கதையை நாடகமாக எழுதி சிவாஜிகணேசனிடம்
கொடுத்தார். நாடகத்தில் பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர் குடும்பத் தலைவர். அன்பே
உருவான அவரது மனைவி. இரு மகன்கள் ஒருவன் ஊருக்கு நல்லவனாகவும், வீட்டிற்கு
சூறாவளியை உருவாக்குகின்றவனாகவும், இன்னொருவன் வீட்டிற்கு நல்லவனாகவும்,
வெளியில் கெட்டவனாகவும் இருக்க, மகளாலும், மருமகளாலும் வேறு வீட்டில்
பிரச்னைகள் வர, சதா கலவரமும், குழப்பமும் நிறைந்திருக்கும் இந்த நிலையில்
வீட்டின் தலைவரான பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர் பணி ஓய்வு பெற்று வீடு திரும்ப,
அவரது பிரஸ்டீஜுக்கும் இழுக்கு நேரிடுகிறது. சதா கலவரமும், ரகளையுமாக வீடு
இருப்பதால் அந்த நாடகக் கதைக்கு “வியட்நாம் வீடு” என்று பெயரிட்டிருந்தார்
கதையை எழுதிய கே சுந்தரம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிரஸ்டீஜ்
பத்மநாப அய்யராக நாடக மேடை ஏறியதும் சிவாஜி நாடக மன்றத்துக்குத் தொடர்ந்து
நாடகங்கள் கிடைக்கவும் தொடங்கின. சபாக்காரர்கள் தொடர்ந்து தேதி கொடுத்து
வர, நாடகம் பெரும் வெற்றி பெற்றது. இந்த நாடகத்தை திரைப்படமாக்கவும்
ஆசைப்பட்டார் சிவாஜிகணேசன். தனது “சிவாஜி பிலிம்ஸ்” மூலம் இந்த நாடகக்
கதையை 1970ல் “வியட்நாம் வீடு” என்ற பெயரிலேயே சினிமாவாகவும் எடுத்து
வெளியிட்டார் சிவாஜி. நாடகத்தில் அவர் ஏற்று நடித்திருந்த பிரஸ்டீஜ்
பத்மநாப அய்யராக சிவாஜி நடிக்க, அவரது மனைவியாக மடிசார் கட்டிக் கொண்டு
'நாட்டியப் பேரொளி' பத்மினி நடிக்க, வெள்ளித்திரையிலும் விழா கண்டது
இத்திரைப்படம். இதன் பின்னர் இந்த நாடகக் கதாசிரியரான கே சுந்தரம் தனது
பெயரோடு வியட்நாம் வீட்டையும் இணைத்து “வியட்நாம் வீடு” சுந்தரம் என
அழைக்கப்பட்டு புகழ் பெற்றார்.