பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது வைரலாகி வருகிறது. அவரின் கடைசி பட பாடல் வெளியீட்டுவிழா என்பதால் அவர் உணர்ச்சிவசப்படுவார், கண் கலங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரோ மேடையிலே நான் அழமாட்டேன் என்று கூறினார். அவருக்கு 'யார் பெற்ற மகனோ' என்ற பாடலை பாடி ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர். அவரும் ரசிகர்களை குஷிப்படுத்த மேடையில் டான்ஸ் ஆடினார்.
விழாவில் விஜய் பேசியது: ''ஐயா ராசா, செல்லங்களா யார்ரா நீங்கலாம், என் நெஞ்சில் குடியிருக்கும்'' என பேச தொடங்கினார். முதலில் மலேசியாவை புகழ்ந்தார். ''இலங்கைக்கு பிறகு மலேசியாவில் அதிகமான தமிழ் மக்கள் பார்க்கிறோம். மலேசியாவில் நம்ம நண்பர் அஜித் நடித்த 'பில்லா' கூட இங்கே தான் படப்பிடிப்பு செய்துள்ளார்கள். எனது 'காவலன், குருவி' படங்களும் இங்கே எடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்த உதவிய மலேசியா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
சின்ன மண் வீட்டை கட்ட சினிமா வந்தேன், நீங்கள் பங்களா கொடுத்துவிட்டீர்கள். கடந்த 30 வருடங்களாக எனது பயணத்தில் ரசிகர்கள் உடன் இருந்தார்கள், அடுத்த 30 வருடத்திற்கு நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். நன்றினு சொல்றவன் இல்ல, நன்றிகடன் தீத்துட்டு தான் போவான் இந்த விஜய். எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் ''என்றார்.
அனிருத்
படம் குறித்து பேசியவர் முதலில் அனிருத்தை புகழ்ந்தார். '' அனிருத்திற்கு நான் எம்டிஎஸ் என்ற என புதிய பெயர் கொடுக்கிறேன், அதுக்கு மியூசிக்கல் டிபார்ட்மென்ட் ஸ்டோர் என அர்த்தம். அதற்குள் நுழைந்தால் நீங்கள் முடிவே இல்லா பாடல்கள், பிஜிஎம் கேட்கலாம்'' என்றார்.
பொதுவாக பேசுகையில் ''நமக்கு எதிரி தேவை; வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல நண்பர்கள் தேவையில்லை. பலமான எதிரி தேவை. பலமான எதிரி தான் உங்களை பலமாக்குவார்கள். நான் முதல் நாளில் இருந்தே விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். ஆனால் என்னுடன் என்னுடைய ரசிகர்கள் 33 ஆண்டுகளாக நிற்கிறார்கள். எனக்காக நின்றவர்களுக்காக இப்போ நான் நிற்கப்போகிறேன்'' என்றார்.
எச்.வினோத்
இயக்குனர் வினோத் குறித்து பேசியவர், ''அவர் சமூக அக்கறை கொண்ட இயக்குனர். இதற்கு முன்பே நாங்கள் கூட்டணி அமைக்க வேண்டியது, கடைசியில் இப்போது நடந்துவிட்டது. முன்பு அதற்காக கலந்துரையாடலும் நடந்தது. அப்போது நடக்கவில்லை. நல்ல வேளை ஒருவழியாக இப்படத்தில் சேர்ந்துவிட்டோம்'' என்றார்.
பின்னர் ''படத்தில் நடித்த மமிதா பைஜூ, வெறும் டூயட் மட்டுமல்ல, இந்த படத்துக்கு அப்புறம் ஒரு தங்கையாக எல்லோர் குடும்பத்திலும் கொண்டாடப்படுவார். என்னுடைய வில்லன் பாபி தியோல் நடிப்பு படத்தில் மிக சிறப்பாக இருக்கும். அவருடைய இரு படங்களில் இருந்து இன்ஸ்பையர் ஆகி செய்தது தான் 'ப்ரியமுடன்' மற்றும் 'வில்லு'. அதை அவரிடம் 'உங்களுக்கே தெரியாமல் உங்க படத்தை சுட்டு நான் நடித்திருக்கிறேன்' எனக் கூறினேன். அப்படியா என்ன படம் எனக் கேட்டார். அப்போதுதான் அய்யய்யோ நானே வாய் குடுத்து மாட்டிக் கொண்டேனா என நினைத்தேன்.
பூஜா ஹெக்டே தமிழ்நாட்டின் மோனிகா பெல்லுச்சி. அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான ஒன்று. எப்போதும் ஹீரோ ஹீரோயினுக்கு தான் கெமிஸ்ட்ரி இருக்கும் என்பார்கள். ஆனால் எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். அது கில்லியில் துவங்கிய கெமிஸ்ட்ரி'' என்றார்
கடைசியில் விஜயிடம் ''சினிமாவில் நீங்க விட்டுட்டு போற இடத்தை யாராலையும் நிரப்ப முடியாதுனு நாங்க நினைக்கிறோம். நீங்க என்ன நினைக்குறீங்க?''னு தொகுப்பாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், ''யார் யாரை எந்த இடத்துல வைக்கணும்னு மக்களுக்கு தெரியும் அவங்க பார்த்துப்பாங்க'' என்றார்.
அரசியல்
அரசியல் குறித்து நேரடியாக பேசவில்லை. மலேசியாவில் அதற்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் சில விஷயங்களை மறைமுகமாக பேசினார். அதில் ''விஜய் தனியா வருவாரா.. அணியா வருவாரா.. என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போது கூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்சில்தான் கிக் இருக்கும். ஆகவே, 2026ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது; மக்களுக்காக அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம்'' என்றார்
ஜனநாயகன் விழாவில் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் தனக்கு வெற்றிக்கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், மீடியா என யாருக்கும் நன்றி சொல்லவில்லை. இந்த படத்தில் நடித்த சில நடிகர்கள் குறித்து பேசவில்லை. குறிப்பாக, தமிழக அரசியல், பராசக்தி, சிவகார்த்திகேயன் குறித்து வாய் திறக்கவில்லை.
விஜய் சொன்ன குட்டிக்கதை
''நான் உங்களுக்கு ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு ஆட்டோக்காரர் ஒரு கர்ப்பிணி பெண்ணை ஆட்டோவில் ஆஸ்பத்திரி அழைத்து சென்றார். அப்போது பயங்கர மழை பெய்ய, ஆட்டோக்காரர் அந்த பெண்ணிடம் குடையை கொடுத்து பார்த்து போ என்று சொல்கிறார். அதற்கு அந்த பெண், இந்த குடையை நான் எப்படி உங்களுக்கு கொடுப்பது எனக் கேட்க, அவர் சிரித்துவிட்டு வேறு யாராவது தேவைப்படுவோருக்கு கொடுங்கள் என சொல்லி சென்றுவிட்டார்.
மருத்துவமனை வாசலில் இருந்த பெரியவர் மழைக்கு பயந்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு இந்தப் பெண் குடையை கொடுக்க அவரும் எப்படி உங்களுக்கு திருப்பி கொடுப்பது என்று கேட்க, அந்தப் பெண்ணும் தேவைபடுவோர்களுக்கு கொடுங்க என்கிறார். அந்த பெரியவர் பஸ்சில் ஏறும்போது, அங்கிருந்த பூக்கார அம்மாவுக்கு குடையை கொடுக்கிறார். கடைசியாகஅந்தக் குடை ஒரு பள்ளிச்சிறுமியிடம் செல்கிறது. அந்த சிறுமியை அழைத்து செல்ல அவரின் தந்தை வருகிறார். மழையில் மகளை அழைத்து வர அவரிடம் குடை இல்லை. ஆனால் அந்த மகள் குடையுடன் வருகிறார். அந்த அப்பா வேறு யாரும் இல்லை, அந்த ஆட்டோக்காரர் தான்.
அதாவது அந்த குடை அவர் கொடுத்த குடை தான். இந்தக் கதையின் நீதி முடிந்த வரை எல்லோருக்கும் சின்ன சின்ன உதவி செய்யுங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமையும். வெள்ளத்தில் தவிப்பவருக்கு படகு கொடுத்தால், நீங்கள் பாலையில் தவிக்கும் போது அது ஒட்டகம் திரும்ப வரும்.
உங்களுக்கு கெடுதல் செய்வாரை பழி வாங்கினால் அந்த நாள் மட்டுமே நீங்கள் மகிழ்வீர்கள். அவரை மன்னித்தால் வாழ்நாள் முழுக்க நிம்மதி இருப்பீர்கள். யாரையும் கஷ்டப்படுத்த இல்லை இந்த வாழ்க்கை. முடிந்த வரை நல்லது செய்யுங்கள். அது வரும்காலத்தில் உங்களுக்கு கைகொடுக்கும். பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் ப்ரீயாய் விடுங்கள்'' என்ற குட்டிக்கதையை சொன்னார் நடிகர் விஜய்.