கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

சூர்யா கேரியரில் அவருக்கு வெற்றியையும், கமர்ஷியல் ஹீரோ என்ற அங்கீகாரத்தையும் கொடுத்த அயன், மாற்றான், காப்பான் படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். சூர்யாவின் வளர்ச்சியில் அவருக்கு பெரிய பங்கு உண்டு. அதனால்தான் அவர் மறைவு செய்தி கேட்டதும், முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.
இந்த நிலையில் கே.வி.ஆனந்த் உடனான நினைவுகைள அறிக்கையாக வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது: கே.வி. ஆனந்த் சார்... இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்ற உண்மை, மனமெங்கும் அதிர்வையும், வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் துயரத்தில், மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.
நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில் தான், சரவணன் சூர்யாவாக: மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை: சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன்.
மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் அந்த இரண்டு மணிநேரம், ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போலவே உணர்ந்தேன். நேருக்கு நேர் திரைப்படத்துக்காக நீங்கள் என்னை எடுத்த அந்த ரஷ்யன் ஆங்கிள் புகைப்படம் தான், இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும், என்மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தைவிட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும், நடிகனாக என்னை படம்பிடித்ததும் நீங்கள்தான்.
முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது அதன்மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பும், வழிகாட்டலும் மறக்கமுடியாதது. வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழி நடத்துகின்றன.
இயக்குனராக அயன் திரைப்படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு, ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள், புதிய உத்வேகத்தை அளித்தது. அயன் திரைப்படத்தின் வெற்றி, அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக: என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
எனது முதல் திரைப்படத்தில் (நேருக்கு நேர்)நீங்களும், உங்களின் கடைசி திரைப்படத்தில் (காப்பான்) நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண். எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார். இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி. இவ்வாறு அந்த அறிக்கையில் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.