அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

2025ம் ஆண்டில் வெளிவந்த 280க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் சுமார் 10, மீடியம் நடிகர்களின் படங்கள் மேலும் ஒரு 10, ஓரளவிற்குத் தெரிந்த நடிகர்களின் படங்கள் என ஒரு 10 போக மீதி இருக்கும் 250 படங்களும் அதிகப் பிரபலமில்லாத நடிகர்கள், வளரும் நடிகர்கள், அறிமுக நடிகர்கள் உள்ளிட்டவர்களின் படங்கள்தான். அந்தப் படங்களால்தான் இந்த வருடம் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையும் இதற்கு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகி உள்ளது.
கதை அழுத்தமாகவும், திரைக்கதை உணர்வுபூர்வமாகவும், வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும் போதுதான் ஒரு படம் முழுமையடையும். எழுத்தில் அவை சரியாக வந்த பிறகு அதை தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நடிகர்களும், நடிகைகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வருடம் இவற்றை சில சிறிய படங்கள் செய்ததால் முத்திரை பதித்தன, செய்யத் தவறியதால் சில பெரிய படங்களும் அவை சம்பந்தப்பட்டவர்களுக்கு நித்திரையைத் தொலைத்தன.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடத்திலும் ஏதோ ஒரு சில சிறிய படங்கள் எதிர்பாராத விதத்தில் ரசிகர்களைக் கவர்ந்து குறிப்பிடத்தக்க வரவேற்பையும், வசூலையும் பெற்று முத்திரை பதிக்கின்றன. அந்த விதத்தில் இந்த வருடம் வந்த சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
டூரிஸ்ட் பேமிலி

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தங்கள் அறிமுகப் படத்திலேயே தடம் பதித்த சசிகுமார், சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த படம். முன்னணி நடிகர்களின் படங்களே இந்த வருடம் ஓடாத நிலையில் இந்தப் படம் தந்த வெற்றி முக்கியமானது. இலங்கை அகதிகள் பற்றி சில படங்கள் தமிழ் சினிமாவில் இதற்கு முன் சோகமயமாகவே வந்திருக்கிறது. அந்த சோகத்திலும் கொஞ்சம் நகைச்சுவை கலந்த படமாக அமைந்ததால் இந்தப் படம் வெற்றியைப் பெற்றது. சிறிய முதலீட்டில் பெரிய லாபம் தந்த படங்களில் முதன்மையானது.
குடும்பஸ்தன்

அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வீ மேக்னா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினரான மணிகண்டன், சான்வீ அவர்களது குடும்ப வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள்தான் படத்தின் கதை. கொஞ்சம் நீட்டி முழக்கி சொன்னாலும் யதார்த்தம் கலந்த சுவாரசியமான படமாக இருந்தது. வளர்ந்து வரும் நடிகர்களில் மணிகண்டனின் கதைத் தேர்வு குடும்பத்து ரசிகர்ளை நோக்கியதாக இருக்கிறது.
மாமன்

ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ப்ரூஸ் லீ' படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் பாண்டிராஜ். அந்தப் படத்தை அடுத்து எட்டு வருட இடைவெளியில் வெளிவந்த அவரது இரண்டாவது படம் இது. இடையில் 'விலங்கு' வெப் தொடரை இயக்கி பெயரைப் பெற்றார். ஒரு தாய் மாமனுக்கும், அவனது மருமகனுக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் இந்தக் கதை. சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் தியேட்டர் வசூல், ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றால் இந்தப் படம் லாபத்தைப் பெற்றது.
3 பிஹெச்கே

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திற்கும் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். அந்தக் கனவை நோக்கிய ஒரு குடும்பத்தின் பயணம்தான் இந்தப் படம். நாடகத்தனமான காட்சிகளை மட்டும் குறைத்திருந்தால் இன்னும் கூடுதலான வரவேற்பைப் பெற்றிருக்கும்.
சக்தித் திருமகன்

அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி, திருப்தி ரவீந்திரா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம். ஒரு அரசியல் புரோக்கர் என்னவெல்லாம் செய்வார் என்பதை தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்திய படம். தியேட்டர்களில் வெளியான போது கிடைத்த வரவேற்பை விட, ஓடிடி தளத்தில் வெளியான போது இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டியவர்கள் அதிகம், அதில் சில முக்கிய சினிமா பிரபலங்களும் உண்டு.
ஆண்பாவம் பொல்லாதது

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான பிரிவுதான் படத்தின் கதை. அதை வைத்து கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல், கொஞ்சம் சென்டிமென்ட் கலந்த படமாகக் கொடுத்து ரசிக்க வைத்தார்கள். இது போன்ற வளரும் நடிகர்களின் படங்கள் கவனிக்கப்பட வேண்டியது தமிழ் சினிமாவுக்குத் தேவையான ஒன்று.
சிறை

2025ம் வருடத்தின் 11வது மாதமான நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையாக 32 படங்கள் வெளிவந்தன. ஆனால், அவற்றில் ஒன்று கூட வரவேற்பைப் பெறவில்லை. டிசம்பர் மாதத்திலும் 22 படங்கள் வெளிவந்தன. மொத்தமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்று கூட வரவேற்பைப் பெறாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், கடைசி வாரத்தில் வெளிவந்த 'சிறை' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று ஆறுதலைத் தந்தது. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் எல்கே அக்ஷய் குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். ஒரு ஆயுதப்படை காவலருக்கும் சிறை கைதிக்கும் இடையிலான ஒரு அன்பைப் பரிமாறிக் கொண்ட படம். உணர்வுபூர்வமான கதை சொல்லல் இந்தப் படத்தை ரசிக்க வைத்தது.

மேலே குறிப்பிட்ட படங்கள் தவிர, “மர்மர், லெவன், மெட்ராஸ் மேட்னி, மார்கன், காந்தி கண்ணாடி, அதர்ஸ், மிடில் கிளாஸ், அங்கம்மாள்” உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக, ஓடிடி தளங்கள், சில குறிப்பிட்ட ஏரியா தியேட்டர்கள் என வரவேற்பைப் பெற்ற படங்களாக இருந்தன. இப்படங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இவை பெற்ற வரவேற்பை விட இன்னும் அதிகமான வரவேற்பைப் பெற்று வசூலிலும் கூடுதல் லாபத்தைத் தந்திருக்கலாம்.