சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
ஒரே ஒரு தெலுங்கு இயக்குனர், இந்திய சினிமாவையே புரட்டிப் போட்டார். 'பாகுபலி' என்ற இரண்டு பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த ராஜமவுலி தான் அவர். இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா தான் என்றிருந்தது. இப்போதோ தென்னிந்திய சினிமா என்றாலே அது தெலுங்கு சினிமா என்று சொல்லுமளவிற்கு 'பாகுபலி' படங்களுக்குப் பின்னர் மாறிவிட்டது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு சில தெலுங்கு திரைப்படங்கள்தான் பான்-இந்தியா படங்களாக இந்திய சினிமாவை ஆட்டிப் படைக்க உள்ளது. அடுத்த மாதத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 1', நானி நடித்துள்ள 'ஷியாம் சிங்க ராய்', ஜனவரி மாதத்தில் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்', மற்றும் பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்', ஆகிய படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளிவர உள்ளன. அதன்பிறகும் மேலும் சில படங்கள் இப்படி வெளியாக உள்ளன.
தமிழில் அப்படியான படங்களைக் கொடுக்கும் அளவிற்கு இங்குள்ள ஹீரோக்கள் தங்களை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறார்கள். இந்த மாதம் சூர்யா நடித்து ஓடிடியில் வெளிவந்த 'ஜெய் பீம்' படம் மட்டும் பான்-இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியானது. இப்படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'அண்ணாத்த' படம் கூட தெலுங்கில் ஓடவில்லை. அடுத்து அஜித் நடித்துள்ள 'வலிமை', விஜய் நடிக்கும் 'பீஸ்ட்', சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்கள் வர உள்ளன. இந்தப் படங்களை பான்-இந்தியா படங்களாக வெளியிட அவற்றின் தயாரிப்பாளர்கள் முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறி தான்.
பான்-இந்தியா படம் என்பது படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அனைத்து இந்திய ரசிகர்களுக்குமான படமாக திட்டமிடல் வேண்டும். அப்படி எந்தப் படத்தையும் இந்த முன்னணி ஹீரோக்கள், இதுவரையிலும் ஆரம்பிக்கவில்லை.
ஒரே ஒரு ஆறுதலாக மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' பான்-இந்தியா படமாக வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், படத்திற்கான பிரமோஷனை இன்னும் சரியான அளவில் ஆரம்பிக்கவில்லை. படத்தின் டைட்டிலை மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளார்கள். ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் இந்தப் படம் இன்னும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மை.
தமிழ் சினிமாவிலும் சிறந்த இயக்குனர்கள், நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், தெலுங்கு சினிமா அளவிற்கு பிரம்மாண்டமான படங்களை உருவாக்க தயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2022ல் வரும் 'பொன்னியின் செல்வன்' மூலம் ஏதாவது மாற்றம் நிகழுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.