முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
ஆணாதிக்கம் மேலோங்கி இருக்கும் தமிழக அரசியலில் தனிப்பெரும் பெண் ஆளுமையாக வந்து, அரசமைத்து புகழ் கொடி நாட்டி, வெற்றி என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே வேட்கை என கொண்டு வீருநடை போட்ட வீராங்கனை ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று…
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மெலுகோட்டே என்ற ஊரில் 1948ல் பிப்ரவரி 24ல் பிறந்த ஜெயலலிதா, சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் தனது பள்ளிப் படிப்பை பயின்று, பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களையும் பெற்று மாநில அளவிலும் இடம் பிடித்தார்.
தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளை சரளமாக பேசும் திறன் படைத்த ஜெயலலிதா, 1961ல் வெளிவந்த “ஸ்ரீ ஷைல மாகத்மே” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது 13வது வயதில் வெள்ளித்திரையின் வெளிச்சம் கண்டார்.
சிறு வயதிலேயே பரதநாட்டியம், மோகினியாட்டம், மணிப்புரி போன்ற நடனக்கலைகளை முறைப்படி கற்ற இவர் 1960ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் தனது நடன அரங்கேற்றத்தை அறங்கேறச் செய்தார்.
இவரது நடன அரங்கேற்றத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடனத்தைக் கண்டு வியந்ததோடு, ஜெயலலிதாவின் தாயாரிடம் திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறிச் சென்றார்.
நடனமட்டுமின்றி இசையிலும் நல்ல தேர்ச்சி உள்ளவராகவே இருந்திருக்கிறார் ஜெயலலிதா. கர்நாடக இசை, மேற்கத்திய இசை என இரண்டும் நன்கு அறிந்தவரான இவருக்கு பியானோவும் நன்றாக இசைக்கத் தெரியும்.
வழக்கறிஞராக வேண்டும், கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்றெல்லாம் பல கனவுகளை சுமந்திருந்த பதின் பருவ ஜெயலலிதா, 1964ஆம் ஆண்டு வெளிவந்த “சின்னடா கொம்பே” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தனது 15வது வயதில் முதன் முதலாக நாயகியாக தென்னிந்திய திரைவானில் தடம் பதித்தார்.
1965ல் இயக்குநர் ஸ்ரீதரின் “வெண்ணிற ஆடை” திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், 1980வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிகளிலும் 140க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த காலகட்டங்களில் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாகவும் அறியப்பட்டார்.
1982ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பின் 1983ல் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் பணியமர்த்தப்பட்டார்.
1984ல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா. ராஜ்யசபாவில் இவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை எண்ணான 185, சிஎன் அண்ணாதுரை பார்லிமென்ட் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் அவருக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
உள்ளுர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருந்த ஆற்றல் படைத்த ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா.
எம் ஜி ஆரின் மறைவிற்குப் பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களை கைப்பற்றி, தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவராக அறியப்பட்டார்.
1989ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத்தில் அன்றைய தமிழக முதல்வராக இருந்த மு கருணாநிதி பட்ஜெட் உரையை படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சலசலப்பில், சட்டசபையை விட்டு வெளியேறிய ஜெ ஜெயலலிதா, இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று சபதமேற்றுச் சென்றார். அதேபோல் 1991ல் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று இரண்டாவது பெண் முதலமைச்சராக சட்டசபைக்குள் நுழைந்தார்.
தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மழைநீர் சேகரிப்பு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம், அம்மா உணவகம் என ஏராளமான மக்கள் நல திட்டங்கள் இவரது ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தி வெற்றி கண்டு மக்கள் மனங்களில் “அம்மா” என நிலைத்து நின்றார்.
கலைத்துறையிலும், அரசியல் களத்திலும் வெற்றி என்ற ஒன்றைத் தவிர வேறொன்றும் சிந்திக்காத சிங்கப் பெண்ணாய் வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினமான இன்று அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.