துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பொதுவாக கிரைம் திரில்லர் படங்களில் பின்னணி இசைக்குத்தான் அதிக வேலை இருக்குமே தவிர பாடல்களுக்கு இருக்காது. பாடல்களுக்கான சூழல்களும் படத்தில் இருக்காது. அப்படி இருந்தால் அது திணிக்கப்பட்டதாக இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 'ஜானி'.
இந்தப் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்தார். ஒன்று ஜானி என்ற திருடன் வேடம், அடுத்து வித்யாசாகர் என்னும் நாவிதன் வேடம். ஜானி ஒரு நூதனத் திருடன். தடயங்கள் இல்லாமல் திருடுவதில் வல்லவன். பிரபல பாடகி அர்ச்சனாவின் (ஸ்ரீதேவி) ரசிகனாகவும் இருக்கிறான். எதிர்பாராமல் இருவரும் சந்தித்து பழகுகின்றனர். ஜானியின் அன்பால் ஈர்க்கப்படும் அர்ச்சனா, அவனை விரும்புகிறாள். அதை அவனிடம் கூறி திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கிறாள். இதை எதிர்பார்க்காத ஜானி தான் ஒரு திருடன் என்று கூற முடியாமல், அவள் காதலை ஏற்கும் தகுதி தனக்கு இல்லை எனக் கூறி வெளியேறுகிறான். இதனால் மனம் வெதும்பிய அர்ச்சனா பாடுவதை நிறுத்திவிடுகிறாள்.
ஜானியைப் போன்ற தோற்றம் கொண்ட வித்யாசாகர் தன் வேலைக்காரியான பாமாவை காதலித்து அவளையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். இந்நிலையில் பாமா வித்தியாசாகரை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பணக்காரனுடன் ஓட திட்டமிடுகிறாள். இதை கண்டுபிடிக்கும் வித்தியாசாகர் அவளை கொன்றுவிடுகிறான். இந்தக் கொலைப் பழி ஜானி மீது விழுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
பக்கா கிரைம் திரில்லர் படமான இதில் பாடல்களுக்கான சூழ்நிலையை மகேந்திரன் உருவாக்கி இருந்தார். குறிப்பாக கிளைமாக்சில் தன் காதலன் ஜானியை வரவழைப்பதற்காக மேடை பாடகியான ஸ்ரீதேவி கடைசி கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் 'காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே...' என்ற பாடலை பாடுவார். ஜானியிடன் தன் காதலை மறைமுகமாக தெரிவிக்க 'என் வானிலே ஒரே வெண்ணிலா...' என்று பாடுவார். இது தவிர 'ஆசைய காத்துல தூதுவிட்டேன்' என்ற துள்ளல் பாடலும், 'சென்யுரிடா ஐ லவ் யூ' என்ற மேற்கத்திய இசை பாடலும், 'ஒரு இனிய மனது...' என்ற மெல்லியை பாடலும் படத்தில் இடம் பெற்றது. இந்த பாடல்கள் அனைத்தும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீ மேக் செய்யப்பட்டது. இளையராஜா இசை ராஜங்கம் நடத்திய காலம் அது.