பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் என குறிப்பிடப்படும் சில இயக்குனர்களின் இயக்கத்தில் வெளிவந்த கடைசி படங்கள் தரத்திலும், வசூலிலும் பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்குத் தந்துள்ளது. சிறிய பட்ஜெட் படங்களும், அறிமுக இயக்குனர்களின் படங்களும் தரமான படங்களாகவும், குறிப்பிடத்தக்க வசூலைத் தந்து லாபத்தைத் தரும் படங்களாகவும் அமைந்து வருகின்றன. ஆனால், தங்களது முந்தைய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துத் தெரிந்த சில இயக்குனர்களின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தருவது தமிழ் சினிமா உலகிற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'தக் லைப்' படம் கடந்த நான்கு நாட்களில் வசூலித்த தொகையும், படத்தின் விமர்சனங்களும் நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது. படம் வெளிவருவதற்கு முன்பு கமல் - மணி கூட்டணியில் 1987ல் வெளிவந்த 'நாயகன்' படத்தையே இந்தப் படம் மறக்கடித்துவிடும் என்று படக்குழுவில் உள்ளவர்கள் சொன்னார்கள். ஆனால், 'நாயகன்' படம் ஒரு தரமான கிளாசிக் படம், அதை அவர்கள் கூட்டணியே நினைத்தாலும் கூட கிட்ட நெருங்க முடியாது என்பதை 'தக் லைப்' படத்தின் தரமும் நிரூபித்துவிட்டது என ரசிகர்களே பேசும் அளவிற்கு அமைந்துவிட்டது.
இந்தப் படம் பான் இந்தியா வெளியீடு, படக்குழுவினரின் ஊர் ஊரா புரமோஷன் என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 500 கோடிக்கும் அதிகமாக நிச்சயம் வசூலிக்கும் என்றும் பேசப்பட்டது. ஆனால், இப்போது தமிழகத்திலேயே 100 கோடியைத் தொடுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பள்ளிகள் திறந்த வாரத்தில் வெளியானது, குடும்பத்துடன் பார்க்க முடியாத ஒரு கதைக்களம் என படத்திற்கான நெகட்டிவ் விஷயங்கள் அமைந்ததும் ஒரு காரணம்.
மணிரத்னம் மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் மற்ற சீனியர், ஜுனியர் இயக்குனர்களின் படங்களும் தமிழிலும், மற்ற மொழிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்தது தமிழ் சினிமாவில் ஒரு 'காயத்தை' ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் கூட அது மிகையில்லை.
சூர்யா நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'ரெட்ரோ', ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் நடித்து ஹிந்தியில் வெளிவந்த 'சிக்கந்தர்', ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து தெலுங்கில் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்', வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து தமிழில் வெளிவந்த 'விடுதலை 2', சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' என சில முன்னணி இயக்குனர்களையும் அவர்களின் படங்களையும் இந்த வருத்தமான தோல்விக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
தங்களது அடுத்த படங்களில் இந்த இயக்குனர்கள் அவர்களும் மீண்டெழுந்து தமிழ் சினிமாவையும் கொஞ்சம் மீட்டு எடுக்கட்டும்.