பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1938ம் ஆண்டு ஜன.,7ல் பிறந்த இவர் தனது 17வது வயதில் ‛மகாகவி காளிதாஸ்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகாகி புகழ்பெற்றார். தமிழில் ‛நாடோடி மன்னன்' என்ற படத்தில் எம்ஜிஆர் உடன் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். கடைசியாக தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில் வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். சரோஜாதேவிக்கு ஸ்ரீ ஹர்ஷா என்ற கணவர் இருந்தார். 1986லேயே அவர் மறைந்துவிட்டார். புவனேஷ்வரி, இந்திரா என இரு மகள்களும், கவுதம் ராமச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும், தமிழகம் உள்ளிட்ட பிறமாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார்.
சரோஜாதேவியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரபலங்களும், திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்த வீட்டில் குவிந்தனர்.
செவ்வாய் அன்று இறுதிச்சடங்கு
நடிகை சரோஜா தேவியின் இறுதிச்சடங்கு நாளை(ஜூலை 15) செவ்வாய் அன்று பெங்களூருவில் அரசு மரியாதை உடன் நடக்கிறது.
சோகத்திலும் ஒற்றுமை
சரோஜாதேவி நடித்த பல பாடல்களுக்கு ‛மெல்லிசை மன்னர்' எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். அவரின் நினைவு தினம் இன்று(ஜூலை 14). இந்த நாளிலேயே சரோஜாதேவியும் மறைந்தது திரை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல 2015ம் ஆண்டில் எம்எஸ்வி இறக்கும் போது அவரது வயது 87. இன்று மறைந்த சரோஜாதேவியின் வயது 87 என்பது குறிப்பிடத்தக்கது.
கண்கள் தானம்
மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழக்கப்பட்டன. இதற்காக மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக எடுத்து சென்றனர். அந்த கண்கள் இரு குழந்தைகளுக்குப் பொருத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இருவரின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளார் சரோஜாதேவி.