பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சினிமா வாழ்க்கையில் 50வது ஆண்டை கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்தியளவில் பல நடிகர்கள் திரையுலகில் 50வது ஆண்டை கொண்டாடியிருந்தாலும் ரஜினி தனது சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியிலும், மற்றவர்கள் பார்வையிலும் சூப்பர் ஸ்டார் ஆகவே இருக்கிறார். இது, மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத விஷயம்.
ஆரம்பத்தில் கஷ்டம்
சென்னை வந்த புதிதில் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறார் ரஜினிகாந்த். சென்னை அண்ணாசாலையில் இருந்த திரைப்பட கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோது நிறைய பிரச்னைகளை, பொருளாதார சிக்கல்களை சந்தித்து இருக்கிறார். இது குறித்து அப்போதைய அவர் நண்பரும், இப்போது முன்னணி தெலுங்கு நடிகருமான மோகன்பாபு கூறுகையில், ‛‛அந்தகாலத்தில் நாங்கள் சென்னை பாண்டிபஜாரில் கனவுகளுடன் சுற்றி வருவோம். சென்னைவாசிகள் நல்லவர்கள், உதவும் குணம் கொண்டவர்கள், மளிகைகடைக்காரர்கள் தொடங்கி, நிறையபேர் எங்களுக்கு உதவி இருக்கிறார்கள். அப்படிதான் ஆரம்பத்தில் நாங்கள் சென்னை வளர்ந்தோம்'' என்று சொல்லியிருக்கிறார்.
50 ஆண்டுகளாக கிங்
1975ல் சினிமாவில் நடிக்க தொடங்கியின் ரஜினிக்கு பெரியளவில் பணக்கஷ்டம் இல்லை. அவர் இன்று வரை கடனாளியாக இருந்தது இல்லை. யாரிடமும் பொருளாதார ரீதியாக கை ஏந்தியது இல்லை. இன்னும் சொல்லப்போனால் பண விஷயத்தில் செழிப்பாகவே இருந்து இருக்கிறார். இப்போதும் போயஸ் கார்டனில் வீடு, சொத்து என கோடீஸ்வரனாக இருக்கிறார். இது பல நடிகர்களுக்கு அமையவில்லை. அவர்கள் ஒரு கட்டத்தில் சொந்த படம் எடுத்து பணத்தை இழந்து இருக்கிறார்கள். மார்க்கெட் போய் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் ரஜினிக்கு அப்படிப்பட்ட நிலை வந்தது இல்லை. இன்றைக்கு இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் ரஜினியும் ஒருவர், இந்தியளவில் அதிக சொத்து வைத்து இருப்பவரும் கூட.
குடும்ப வாழ்வும் மகிழ்ச்சியே
அதேபோல் குடும்ப வாழ்க்கையில் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவர் காதல் திருமணம் செய்தார். கலப்பு மணம்தான். ஆனாலும், இன்றுவரை மனைவியுடன் சண்டை, பிரச்னை என ரஜினிகாந்த் செய்திகளில் அடிபட்டது இல்லை. மனைவி சொல்படி கேட்டால் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஓபனாக பேசி, பலரின் கைதட்டல்களை பெற்றார். ரஜினி வரவு, செலவு, சொத்து விவரங்கள் போன்ற விஷயங்களில் அவர் மனைவி லதா பங்கு முக்கியமானது. அதேபோல், மகள், பேரன், பேத்தி, உறவினர்களுடன் நல்ல உறவு என தன்னிறைவு வாழ்க்கை வாழ்கிறார். இது பல நடிகர்களுக்கு, ஹீரோக்களுக்கு கிடைக்கவில்லை.
பேரன் உடன் நடிக்கலாம்
அதேபோல் ரஜினியை தொடர்ந்து அவர் மகள் இருவரும் சினிமாவுக்கு வந்தார்கள். இயக்குனர், தயாரிப்பாளர் ஆனார்கள். அவர் மருமகனாக இருந்த தனுசும் நடிகர் மற்றும் இயக்குனர். இப்போது மூத்த மகள் ஐஸ்வர்யா மகன்கள் இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் சினிமாவுக்கு வந்தால் ரஜினிக்கு அதை விட பெருமை எதுவும் இருக்க முடியாது. ஒரு படத்தில் மனைவி லதாவுடன் ரஜினி நடித்து இருக்கிறார். மகள்கள் இயக்கத்தில் நடித்துவிட்டார். பேரன்களுடன் நடித்தால் மூன்றாவது தலைமுறையுடன் நடித்த பெருமை பெறுவார். சில ஆண்டுகளில் அதுவும் நடக்க வாய்ப்பு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
உடல்நலத்தில் அக்கறை
வயதளவில் 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு முறை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். சிங்கப்பூர் சென்று ட்ரீட்மென்ட் எடுத்து உயிர் பிழைத்து வந்தார். மற்றபடி, உடல்நலத்திலும் அவர் பக்கா. உணவு, யோகா, உடற்பயிற்சி, நேர்மறை எண்ணம், மற்றவர்களை பாராட்டுவது என உடல், மனம் விஷயத்திலும் ரஜினியை பாராட்டுபவர்கள் பலர்.
பாராட்டும் குணம்
இன்றைக்கு சின்ன படங்கள் ஓடினால், அந்த படக்குழுவை போனில் பாராட்டுகிறார். அவர்களை வீட்டுக்கு அழைத்து பாராட்டுகிறார். இந்த குணங்கள் தமிழ் சினிமாவில் மற்ற சீனியர்களிடம் இல்லை. அதேபோல் ரஜினியிடம் இருக்கிற எளிமை மற்ற நடிகர்கள், ஹீரோக்களிடம் மிஸ்சிங். மேக்கப் இல்லாமல், விக் வைக்காமல் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். வெறும் பனியன் அணிந்தபடியே வீட்டில் ரசிகர்கள், விருந்தினர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார். இது, மற்ற தமிழ் ஹீரோக்களிடம் பார்க்க முடியாத விஷயங்கள்.
நிறைவேறாத அரசியல் ஆசை
அவர் அரசியல் கட்சி தொடங்க ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது அவர் அனைத்து கட்சிகளுடன் நட்பு பாராட்டுகிறார். யாரையும் விமர்சனம் செய்வது இல்லை. இந்தியளவில், தமிழக அளவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ரஜினிக்கு நட்பு உண்டு. அவர்களும் ரஜினி மீது மரியாதையாக இருக்கிறார்கள். பெரியளவில் விமர்சனங்கள் வைப்பது இல்லை. ஒரு காலத்தில் அவருக்கும் அதிமுக தலைமையும் செட் ஆகாமல் இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அவர் மகள் திருமணத்துக்கு ஜெயலலிதா வந்தார். பின்னர் இருவரும் நட்பாக இருந்தனர். பாமகவுடன் உரசல் இருந்தது. பின்னர், பாமக இல்ல விழாவுக்கு ரஜினி சென்றார். சமீபத்தில் கூட பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்தி சங்கமித்ரா தயாரித்த அலங்கு படத்தின் போஸ்டரை ரஜினி வெளியிட்டார். தேசிய அளவில் அவருக்கு அனைத்து கட்சியினரும் நண்பர்கள்.
தேசிய விருது கனவு
விருதுகள் விஷயத்தில் அவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் வாங்கிவிட்டார். அதற்கடுத்து பாரத ரத்னா மட்டுமே பாக்கி. சினிமாவை பொறுத்தவரையில் இந்தியளவில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை வாங்கிவிட்டார். ஆனால், ஏனோ அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மட்டுமே வாங்கவில்லை. அது, அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது. ரஜினிக்கும் 50 ஆண்டில் ஒரு தேசியவிருது வாங்கவில்லை என்றே ஏக்கம் மனதளவில் சின்னதாக இருக்கிறதாம். விரைவில் அவர் தேசிய விருது வாங்க வேண்டும். அந்த கவுரவமும் அவர் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பது அவரின் நண்பர்கள், ரசிகர்கள் ஏக்கமாகவும் இருக்கிறது.