‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
அன்றாட வாழ்வில் அனைவரின் அவசியமாகிப் போன ஒரு அற்புதமான ஊடகம்தான் இந்த சினிமா என்ற சீர்மிகு ஊடகம். வயது பேதமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை, இனம், மொழி பேதங்கள் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு அரிய சாதனமாக இன்று வரை தனது இயக்கத்தைத் தங்கு தடையின்றித் தந்து கொண்டிருக்கின்றது இந்த ஊடகம்.
அனுபவமிக்க இயக்குநர்களால் மட்டுமே அற்புதமான படைப்புகளைத் தர இயலும் என்றிருந்த இந்த சினிமா உலகை, பட்டறிவு வேண்டாம் படிப்பறிவு இருந்தால் போதும் என பலரும் புருவம் உயர்த்தும் அளவு, இந்தப் படவுலகை எவரும் தொட முடியா உயரத்திற்கு எடுத்துச் செல்வோம் என முழக்கமிட்டு களத்தில் குதித்தவர்கள்தான் இந்தத் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். படித்த படிப்பையே மூலதனமாக்கி, அவர்கள் வடித்த முதல் காவியம்தான் இந்த “ஊமை விழிகள்”.
அனுபவமிக்க இயக்குநர்கள் பலர் ஆட்சி புரிந்து கொண்டிருந்த 1980களின் பிற்பகுதியில், அடிப்படைக் கல்வியோடும், அகம் நிறைந்த நம்பிக்கையோடும், அச்சமின்றி நுழைந்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்கள்தான் ஆர் அர்விந்தராஜ் என்ற புதுமுக இயக்குநரும், ஆபாவாணன் என்ற புதுமுக தயாரிப்பாளரும். தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என அனைத்திலும் புது வரவாக உள் நுழைந்து, அதுவரை ரசிகர்கள் கண்டிராத திரைமொழிக்கு உரைநடை எழுதி, பார்வையாளர்களுக்கு மிரள்ச்சியைக் காட்டி, ஒரு புரட்சியை உண்டுபண்ணிய திரைப்படம்தான் இந்த “ஊமை விழிகள்”.
இத்திரைப்படம் உருவாக மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுபவர் மறைந்த நடிகர் 'கேப்டன்' விஜயகாந்த் என்றால் அது மிகையன்று. திரைப்படக் கல்லூரி மாணவர்களை அடுத்த தலைமுறை இயக்குநர்களாகவும், தொழில்நுட்பக் கலைஞர்களாகவும் கணிசமாக உருவாக்கிவிட்டுச் சென்றதில் நடிகர் விஜயகாந்தின் பங்கு அளப்பறியது. தமிழ் நாட்டில் ஒரு பழங்குடி கிராமத்தில் நடந்த தொடர் கொலைகள் சம்பந்தமான செய்திகளின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த “ஊமை விழிகள்” திரைப்படத்தின் கதை.
டி எஸ் பி தீனதயாளாக மிடுக்கான தோற்றத்தில், துடிப்பான கதாபாத்திரத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டியிருப்பார் இத்திரைப்படத்தில். மேலும் சரிதா, கார்த்திக், அருண்பாண்டியன், ஜெய்சங்கர், வாகை சந்திரசேகர், ரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், தியாகு, சசிகலா, ஸ்ரீவித்யா, கோகிலா, இளவரசி, செந்தில், தேங்காய் சீனிவாசன், சச்சு, குமரிமுத்து, டிஸ்கோ சாந்தி, எஸ் ஆர் ஜானகி என ஒரு பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருந்த இத்திரைப்படத்தின் இசையை மனோஜ்-கியான் வழங்க, பாடல்களை எழுதி, படத்தை தனது “திரைச்சிற்பி” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்திருந்தவர் ஆபாவாணன்.
கதை, கதாபாத்திரங்கள், நட்சத்திர தேர்வு, திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, இயக்கம் என ஒவ்வொன்றிலும் தனி கவனம் செலுத்தி, புதியவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் புரட்சிக் காவியம் 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆதிக்கம் தமிழ் திரையுலகில் பெருமளவு ஆக்கிரமித்திருந்தது என்பதற்கு சான்றாக விஜயகாந்தின் “உழவன் மகன்”, “செந்தூரப்பூவே”, “கேப்டன் பிரபாகரன்”, “புலன் விசாரணை” போன்ற ஏராளமான திரைப்படங்களை இங்கே நாம் பட்டியலிடலாம்.
“ஊமை விழிகள்” திரைப்படத்தில் நடித்திருந்த அதே கலைஞர்களை வைத்தே அதன் தொடர்ச்சியாக “மூங்கில் கோட்டை” என்ற தலைப்பிலும் ஒரு படத்தை ஆரம்பித்து, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில், பொருளாதார குறைபாடுகள் காரணமாக அந்தப் படத்தை பாதியிலேயே கைவிடப்படும் நிலை ஏற்பட்டு, படப்பிடிப்பும் அதோடு நின்று போனது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆதிக்கம் மேலோங்க அஸ்திவாரமிட்ட அவதார படைப்பாக வெளிவந்து, ஒரு ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம்தான் இந்த “ஊமை விழிகள்”.