தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

நடிப்புலக மேதை என அனைவராலும் போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், 1952ம் ஆண்டு “பராசக்தி” திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து ஏராளமான சமூகம் மற்றும் ராஜா ராணி கதைகளில் நடித்து, ஒரு முன்னணி நாயகனாக தமிழ் திரையுலகையே தன்பால் ஈர்த்த ஒரு தனிப்பெரும் ஆளுமையாக வளர்ந்திருந்த நிலையில், அவர் நடித்து வெளிவந்த முதல் புராண இதிகாச திரைப்படமாக வந்த திரைப்படம்தான் “சம்பூர்ண ராமாயணம்”.
“எம் ஏ வி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், தயாரிப்பாளர் எம் ஏ வேணு தயாரித்து, இயக்குநர் கே சோமு இயக்கிய இத்திரைப்படத்தின் நாயகனாக, ஸ்ரீராமராக நடித்திருந்தவர் அன்றைய தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான என் டி ராமாராவ். சீதையாக நடித்திருந்தவர் 'நாட்டியப் பேரொளி' பத்மினி. வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் 'பரதன்'.
முதலில் இந்த 'பரதன்' கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட இருந்தவர் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். புராண இதிகாச திரைப்படங்களில் நடிப்பது தனது கொள்கைக்கு முரணான ஒன்று என்ற தீவிர பற்றாளராக அவர் இருந்ததால், அந்த வாய்ப்பு நடிகர் திலம் சிவாஜிகணேசனுக்கு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் தனது அபார நடிப்பை வழங்கி, படம் பார்ப்போர் அனைவரின் கவனங்களையும் ஈர்த்திருப்பார் சிவாஜிகணேசன். படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி, படத்தைப் பாராட்டிப் பேசியதோடு, குறிப்பாக “பரதனைக் கண்டேன்” என நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நடிப்பை சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தார்.
'இறையருட் செல்வர்' ஏ பி நாகராஜன் திரைக்கதை வசனம் எழுத, 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும், வசனங்களும் படத்தின் மகத்தான வெற்றிக்கு துணை நின்றன. 1958ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று, வெள்ளிவிழா கண்டது மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் புராண படங்களின் வருகை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்த திரைப்படம்தான் இந்த “சம்பூர்ண ராமாயணம்” திரைப்படம்.




