நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
இந்தியத் திரையுலகம் என்றால் ஹிந்தித் திரையுலகம் என சொல்லுமளவிற்கு உலக அளவில் ஹிந்தித் திரைப்படங்கள்தான் இந்திய சினிமா என அடையாளம் காணப்பட்டன. அந்த அடையாளத்தை தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி தனது 'பாகுபலி' படங்களின் மூலம் மாற்றினார். அந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்கள் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிப் படங்களும் உலக அளவில் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.
கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படமான 'புஷ்பா', இந்த வருடத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்', கன்னடப் படமான 'கேஜிஎப்' ஆகிய படங்கள் வட இந்தியாவிலும் வசூலைக் குவித்தன. அந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பும், வசூலும் ஹிந்தித் திரையுலகத்தையே கலகலக்க வைத்துவிட்டது. இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த ஹிந்திப் படங்களில் பெரும் வசூலைக் குவித்த படங்கள் என எதுவுமில்லை.
யாரும் எதிர்பார்க்காத படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் மட்டுமே 200 கோடி வசூலைத் தாண்டியது. 'பூல் புலையா 2, கங்குபாய் கத்தியவாடி' ஆகிய இரண்டு படங்கள் மட்டும்தான் 100 கோடி வசூலைக் கடந்தன. மற்ற படங்கள் அனைத்தும் 100 கோடி வசூலைக் கூட எட்ட முடியாமல் தவித்துப் போயின.
அமிதாப் பச்சன், சஞ்சய் தத், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன், ஷாகித் கபூர், டைகர் ஷெராப், அனில் கபூர், ரன்வீர் சிங், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆகியோர் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ஏமாற்றத்தையே தந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த அமீர்கான் நடித்த 'லால் சிங் சத்தா' படம் மூன்று நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்து மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அமீர்கான் படமே இப்படி ஒரு மோசமான வசூலை சந்தித்திருப்பது பாலிவுட்டினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்னிந்திப் படங்களின் தாக்கம் பாலிவுட் ரசிகர்களை நிறைய மாற்றிவிட்டது என்றே பாலிவுட்டினர் கருதுகிறார்கள். அதிலிருந்து ஹிந்திப் பட ரசிகர்களை அவ்வளவு சீக்கிரத்தில் மீட்டெடுக்க முடியாது என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களிலும் பல முக்கியமான தென்னிந்தியப் படங்கள் வர உள்ளன. அவற்றிற்கு இருக்கும் எதிர்பார்ப்பு கூட சில நேரடி ஹிந்திப் படங்களுக்கு இல்லை என்றும் பாலிவுட்டினர் வருத்தத்துடன் உள்ளார்கள்.