தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
மரபுகளை மீறிய மகத்தான படைப்புகளையும், பிறர் சொல்லத் தயங்குகின்ற சமூக பிரச்னைகளையும், தனது கலைப் படைப்புகள் என்ற கலைப் பெட்டகம் வாயிலாக துணிச்சலாக முன்வைத்து, 'இயக்குநர் சிகரம்' என உயர்ந்தவர்தான் இயக்குநர் கே பாலசந்தர். குறிப்பாக இவரது “அரங்கேற்றம்”, “அவள் ஒரு தொடர்கதை”, “அபூர்வ ராகங்கள்”, “அவர்கள்”, “நூல்வேலி”, “சிந்து பைரவி”, “கல்கி” போன்ற திரைப்படங்கள் எல்லாம் திரையில் பெண்ணியம் உரை நிகழ்த்தி, பெரும் புரட்சி செய்த திரைப்படங்களாகும். “மேஜர் சந்திரகாந்த்”, “தாமரை நெஞ்சம்”, “எதிர்நீச்சல்”, “இருகோடுகள்”, “வெள்ளிவிழா” போன்றவைகள் ஆரம்ப காலங்களில் வெளிவந்த இவரது நாடக பாணி திரைப்படங்கள். அந்த வரிசையில் வெளிவந்த ஒரு திரைப்படம்தான் “புன்னகை”.
பெங்காலி எழுத்தாளரான நாராயண் சன்யால் எழுதிய இந்தக் கதையை, இந்தியில் “சத்யகாம்” என்ற பெயரில் சினிமாவாக எடுத்து 1969ல் வெளியிட்டனர். ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தர்மேந்திரா, ஷர்மிளா டாகூர், சஞ்சீவ் குமார், அசோக் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து “புன்னகை” ஆக்கித் தந்தார் இயக்குநர் கே பாலசந்தர்.
உண்மை ஒன்றே தனது வாழ்வின் லட்சியம் என வாழ்ந்து, மறைந்த ஒரு நீதிமானைச் சுற்றிச் சுழலும் கதைதான் இந்தப் படத்தின் கதை. பொதுவாகவே நமது திரைப்படங்களில் பெண்களை பலாத்காரம் செய்வது போன்று வரும் காட்சியிலோ, அல்லது மானபங்கப்படுத்துவது போல் வரும் காட்சியிலோ ஒரு பாடலை இடம் பெறச் செய்வது என்பது, எந்த ஒரு இயக்குநரும் யோசிக்காத ஒன்று. அதிலும் அந்தக் குறிப்பிட்ட பாடலை பாதிப்புக்குள்ளாகும் அந்தப் பெண்ணே பாடுவதுபோல் அமைத்திருப்பது என்பது இந்தியத் திரையுலகிலேயே எந்த ஒரு இயக்குநரும் சிந்தித்திராத ஒன்று. அப்படி ஒரு பாடல் காட்சியை இந்தப் “புன்னகை” திரைப்படத்தில் அமைத்துத் தந்திருப்பார் இயக்குநர் கே பாலசந்தர்.
பெரும் செல்வந்தனாக நடித்திருக்கும் படத்தின் வில்லன் நடிகர் எஸ் வி ராமதாஸ், வீட்டு வேலை செய்யும் அபலைப் பெண்ணான நாயகி நடிகை ஜெயந்தியை பலாத்காரம் செய்வது போன்ற ஒரு காட்சியில், நடிகை ஜெயந்தியே பாடுவதுபோல் வரும் பாடல்தான் “ஆணையிட்டேன் நெருங்காதே, அன்னையினம் பொறுக்காதே, ஆத்திரத்தில் துடிக்காதே, சாத்திரத்தை மறக்காதே” என்ற பாடல். இத்திரைப்படத்தை தமிழாக்கம் செய்ய காரணமாக அமைந்த “சத்யகாம்” என்ற இந்தி திரைப்படத்தில் கூட, குறிப்பிட்ட இந்தக் காட்சியில் பாடல் இடம் பெறவில்லை. “புன்னகை” திரைப்படத்தில் இப்படி ஒரு புதுமையைச் செய்திருப்பார் இயக்குநர் கே பாலசந்தர்.
பொதுவாகவே தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் 'காதல் மன்னன்' என்றாலே சட்டென நம் நினைவைப் பற்றிக் கொள்ளும் நடிகர் ஜெமினி கணேசனை 'நடிப்புச் செல்வம்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட முதல் திரைப்படமாகவும் வெளிவந்த திரைப்படம்தான் இந்த “புன்னகை” திரைப்படம். 1971ம் ஆண்டு நவம்பர் 5 அன்று வெளிவந்த இத்திரைப்படம், வணிக ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தாலும், விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெறத் தவறவில்லை இந்தப் “புன்னகை”.