ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

பொதுவாகவே சினிமா உலகில், நடிகர்கள் தங்கள் திறன் அறிந்து, தங்களுக்கான கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது இயல்பான ஒன்று. அதில் அவர்கள் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் மிக கவனமாக செயல்பட்டு வந்தாலும், சில நேரங்களில் அவர்களது வழக்கமான பாணியிலிருந்து மாறி, இயக்குநரின் வற்புறுத்தலுக்காகவோ அல்லது தயாரிப்பாளரின் விருப்பத்திற்காகவோ சமரசம் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அவர்களது இயல்பான நடிப்பிலிருந்து விலகி, வேறு கதைக் களங்களில் பயணிக்கும் கட்டாயமும் ஏற்படுவதுண்டு.
அவ்வாறு அவர்கள் சமரசம் செய்து நடிக்கும் திரைப்படங்களில் சில வெற்றி காண்பதும் உண்டு. சில தோல்வியில் முடிவதும் உண்டு. அப்படி 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர் தனது இயல்பான உடல் மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்துக் கொடுத்த ஒரு திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “பெற்றால்தான் பிள்ளையா”.
உளவியல் ரீதியாகவே தங்களது ஆதர்ச நாயகனான எம் ஜி ஆரை, அவரது ரசிகர்கள் அவரை ஒரு வீரசாகஸ நாயகனாகவும், அதர்மத்தை எதிர்த்துப் போராடும் போராளியாகவும், பாட்டாளிகளின் தோழனாகவும் பார்த்தே பழக்கப்பட்டிருந்த வேளையில், ஓரிரு திரைப்படங்கள் அதிலிருந்து வேறுபட்டு வெளிவந்து, நல்லதொரு மாற்றத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தித் தந்த ஆண்டாகவே அமைந்திருந்தது 1966ம் ஆண்டு.
இந்த ஆண்டில் எம் ஜி ஆரின் முதல் படமாக பொங்கல் வெளியீடாக வந்த “அன்பே வா” திரைப்படமே எம் ஜி ஆரின் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு வெளிவந்து வெற்றிவாகை சூடியது. இதே ஆண்டின் இறுதியில் வெளிவந்த “பெற்றால்தான் பிள்ளையா” திரைப்படமும் வழக்கமான எம் ஜி ஆர் திரைப்படங்களிலிருந்து வேறுபட்டு இருந்ததோடு, ஒரு முழுநீள குணச்சித்திர நாயகனாக எம் ஜி ஆர் தோன்றி, தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டிய திரைப்படமாகவும் அமைந்திருந்தது.
ஒரு நடிகன் என்பவன் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களை ஏற்று நடித்தால்தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்கும். இப்போது நான் அறிமுகமாகி இருக்கும் அளவிற்கு கூட அறிமுகமாகாத ஆரம்ப காலங்களில் நான் நடித்த ஒரு திரைப்படம்தான் “என் தங்கை”. அந்தப் படம் வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடித்த திரைப்படம்தான். அந்தப் படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகள் கூட கிடையாது. இருப்பினும் படம் வெற்றி பெற்றது. நாளடைவில் நான் நடிக்கும் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் இடம்பெற வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப்பட்டு விட்டது. அதற்கு தயாரிப்புத் தரப்பினர் சொல்லும் காரணம் ரசிகர்கள் உங்கள் சண்டைக் காட்சிகளை முக்கியமாக எதிர்பார்க்கின்றனர் என்பதுதான்.
படத்திற்கு சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. கதைக்குச் சம்பந்தமில்லாத, தேவைப்படாத இடங்களில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்களும் வரவேற்கவே செய்கின்றோம். குறிப்பாக ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி, அது போன்ற காட்சிகள், கதை, உரையாடல், பாடல் என்று 'ஒன்றைப் போன்ற மற்றொன்று' என்ற தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத்திறன் செல்வது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டுப் போடும் செயல் அது என “பெற்றால்தான் பிள்ளையா” திரைப்படம் வெளிவந்தபோது ஒரு தமிழ் மாத இதழ் மூலமாக தனது ரசிகர்களோடு எம் ஜி ஆர் உரையாடும் அளவிற்கு அவருக்கு மிக நெருக்கமான திரைப்படமாகவும், அவர் பெரிதும் விரும்பிய ஒரு திரைப்படமாகவும் அமைந்த திரைப்படம்தான் இந்த “பெற்றால்தான் பிள்ளையா”.