ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடியவர் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா பாலு என அழைக்கப்படும் எஸ்பிபி எனும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946ல் ஜுன் 4ல் பிறந்தார். 1968ல் மறைந்த ஓவியர் பரணி மூலம் இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனை சந்தித்து சில பாடல்களை பாடி காட்டினார். தமிழை நன்றாக கற்றுக் கொள் என்ற எம்எஸ்வியின் அறிவுரைப்படி, தமிழை நன்றாக கற்று, எம்எஸ்விஸ்வநாதன் இசையில் வெளிவந்த "சாந்தி நிலையம்" படத்தில் பி.சுசிலாவுடன் இணைந்து ‛இயற்கை என்னும் இளைய கன்னி... என்ற பாடலை பாடி தமிழில் பாடகராக அறிமுகமானார். அப்போது ஆரம்பித்த இவரது இசை பயணம் அதன்பின் இந்தியாவை தாண்டி உலகளவில் இவரின் குரல் ஒலித்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஏறத்தாழ 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பெருமை மிக்கவர் எஸ்.பி.பி. எம்ஜிஆரில் தொடங்கி இன்றைய இளம் கதாநாயக நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று அனைவருக்கும் பாடி இருக்கிறார் என்றால் இவரது குரலுக்கு முதுமை என்பதே இல்லை என்றே அர்த்தம்.
பாடகர் மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என அனைத்திலும் முத்திரை பதித்தார். "சிகரம், கேளடி கண்மணி, குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், ரட்சகன், பிரியமானவளே" போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்பிற்கு சான்றாகவும், ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த "துடிக்கும் கரங்கள்" மற்றும் இவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்த "சிகரம்" என்ற இந்த இரு திரைப்படங்களையும் இவருடைய இசையமைப்பிற்கு சான்றாகவும் கூறலாம்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர், தனியார் அமைப்பு விருதுகள் என அவரின் இசை மகுடத்தை அலங்கரித்தன. கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த 2020ம் ஆண்டு ஆக.,5 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. உடல்நிலை தேறி வந்த நிலையில் செப்., 25ல் மறைந்தார். அவர் மறைந்து இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிவிட்டது.
காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல் டிஸ்கோ கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.
‛‛இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... என எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இந்த பாடல் வரி அவருக்கு மிகவும் பொருத்தமானதே. இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். இவர் மறைந்தாலும் இவரின் குரல் என்றென்றும் ஒலித்து கொண்டே இருக்கும்.