தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொதுவாக எம்ஜிஆர் படம் வெளியானால் அதிமுகவினர் தியேட்டர்களில் கொடியேற்றி தோரணம் கட்டி அதை ஒரு திருவிழாவாக கொண்டாடுவார்கள். கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் வெளிவந்தால் திமுகவினர் அதேபோல கொண்டாடுவார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் தியேட்டரில் கொடியேற்றி தோரணம் கட்டி கொண்டாடிய ஒரே படம் 'சிவப்பு மல்லி'.
1981ம் ஆண்டு வெளியான 'சிவப்பு மல்லி' கம்யூனிச சிந்தனையை சொன்ன ஆரம்பகால படங்களில் முக்கியமானது. ஏவிஎம் சரவணன், அவரது சகோதரர் பாலசுப்பிரமணியம் இணைந்து படத்தை தயாரித்தனர். இது அரசியல் படம் என்பதால் ஏவிஎம் பேனரில் தயாரிக்காமல் பாலசுப்ரமணியம் அண்ட் கம்பெனி என்ற பெயரில் தயாரித்தார்கள். ராம.நாராயணன் இயக்கினார். ஆனாலும் இது ராம நாராயணின் சிந்தனையில் உதித்த படம் அல்ல.
இதன் கதையை எழுதியவர் நடிகரும், கதாசிரியரும், தீவிர கம்யூனிஸ்டுமான ஆந்திராவை சேர்ந்த மதல ரங்கா ராவ். 'எர்ரா மல்லேலு' என்ற பெயரில் சினிமாவாக தயாரானது. முதலாளிகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய இரு கம்யூனிச சித்தாந்த தோழர்களைப் பற்றிய இப்படம் ஆந்திராவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு சிறந்த திரைப்படத்துக்கான மாநில அரசின் நந்தி விருதையும் வென்றது.
ஏவிஎம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியது. அந்த வருட ஆரம்பத்தில் விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஒரு படத்திலேயே அநியாயத்தைக் கண்டு பொங்கும் கோபக்கார இளைஞன் என்ற பிம்பம் விஜயகாந்த் மீது ஏற்பட்டிருந்தது. சிவப்பு மல்லியின் பிரதான வேடத்திற்கு இவர்தான் சரியானவர் என்று விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது ஏவிஎம். அவரது நண்பராக சந்திரசேகர் நடித்தார். இவர்கள் தவிர சாந்தி கிருஷ்ணா, அருணா, அனுராதா உள்பட பலர் நடித்தார்கள்.
சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற 'எரிமலை எப்படி பொறுக்கும்...' என்ற பாடல் இப்போதும் கம்யூனிஸ்ட் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.